History of SIHMA

வரலாறு

சைமாவின் வைரவிழா  –  வரலாறு சொல்லும் விழா

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.”

அறம் பாடும் சொற்கள் நடமாடும் வள்ளுவரின் தேன்தமிழ் திருக்குறளைக்  கற்குந்தோறும் கவின் சொட்டும். வார்த்தை ஒவ்வொன்றிலும் நயத்துடன் கலை பரிணமித்து நடமாடும்; வாழ்வின்பால் தம் சிந்தைக்குத் திறம் கூட்டும்; பொருள் சேர்க்கும்; இப்பாங்கினைப்போல், உழைப்பென்னும் ஒரு சொல்லே வேதமாக, உறக்கம் மறந்து, இடுக்கண் விலக்கி, திறத்துடன் தொழில் செலுத்தி, இன்று இத்திருப்பூர் மாநகரை உலகமே வியந்து திரும்பிப் பார்க்கும் வண்ணம் செய்துள்ளனர் நம் பெரியோர்கள், “அரியன முடிக்கும் திறம் ஒருவர் பெறுவாரென்றால் அஃது அவரது அயராத முயற்சியினால் என்றறிக”, என்ற வள்ளுவரின் குறளுக்கு கண்முன் விளக்கமாய் வீற்றிருக்கிறது நம் திருப்பூர்.

எனில், நமது ஆதி  நிலை என்ன? நாம் கடந்து வந்த பாதை எத்தகையது? இவ்வரிய வரலாற்றில் எதிர்கொண்ட இடர்கள் என்ன? “வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ”, என்றார் பாரதி. அத்தகு தீரம் மனதிற்கொண்டு இவ்வரிய சாதனைக்கு வேராய் நின்றோர் யார், வேருக்கு நீரிட்ட பெருத்தகையோர் யாவர்? என்றெல்லாம் வைரவிழா காணும் இந்த நேரத்திலே நினைவுகூர நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

விடுதலை வேள்வியில் தன்னை ஆகுதியாய் தியாகம் செய்த “கொடிகாத்த குமரன்” உயிர்நீத்த ஊர் திருப்பூர் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

திருப்பூர் என்றால் ஒரு காலத்தில் பருத்தி, காட்டன்  மார்க்கெட், தரகு மண்டி , ஜின்னிங் பேக்டரி: அரிசி ஆலை, தனலட்சுமி மில்; SRC மில்; ஆஷர் டெக்ஸ்டைல்ஸ்; காந்தி நகரில்  செயல்பட்ட கிராம கைத்தொழில் சார்ந்த கதர் துணிகள்; அச்சுப்பதித்தல், காகிதம் செய்தல்; சோப்பு செய்தல்; அதுபோல் வீரபாண்டியில் அமைந்துள்ள சர்வோதய சங்கம், நூல் நூற்றல் இத்யாதி இத்யாதிகளைக்கொண்ட சிறுநகராக இருந்தது.

நமது நகருக்கு பனியன் தொழிலை கல்கத்தாவில் இருந்து கொண்டுவந்து ஆரம்பித்த, பேபி நிட்டிங் இன்டஸ்ட்ரீஸ் திரு. குலாம் காதர் பாய் மற்றும் செல்லம்மாள் நிட்டிங் செல்லம்மாள் அவர்களையும் வணங்குவதோடு, தொழில் திருப்பூரில் நிலைக்க முனைப்பாக செயல்பட்ட ராம்ராஜ் சவுண்டப்பன், ஸ்பைடர் பழனிசாமி, டிசைன் சுந்தரம் போன்ற பெரியவர்களை இந்நேரத்தில் நினைவுகூர்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

அப்போது பனியன் தயாரிப்பும் மிகச்சிறிய அளவில் தான் நடந்து வந்தது. மோட்டா ரகமான 20’s பிளைன்-18gg மெஷின் மூலம் பின்னப்பட்டு பனியன்கள் தயார் செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன. இண்டர்லாக் என்றாலும், 20’s / 30’s நூலில் தயாரிக்கப்பட்ட பனியன்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா மற்றும் மஹராஷ்ட்ரா, பாம்பே, என அனுப்பப்பட்டு வந்தன. அப்போதெல்லாம் பாலிதீன் பைகள் அறிமுகம் ஆதாத காலம்.

6 பனியன்கள் (1/2 டஜன்) அடுக்கப்பட்டு டிஸ்யூ பேப்பரால் கவர் செய்யப்பட்டு, அட்டைப்பெட்டியில் அடைத்து, நூல் கோன் கேஸ் பெட்டியை தேவைக்கு ஏற்ற அளவில் அறுத்து, சைஸ்  செய்து, பனியன் பெட்டிகளை, மரப்பெட்டிக்குள் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வந்தகாலம் அன்றைய காலம். மணியம் ஒர்க்ஷாப்தான் கைப்பிரஸ் தயார் செய்து விற்பனைக்கு விட்டார்கள். கேலண்டரிங் மிஷன்  சாதா கேலண்டரிங்தான். பின் ஹைட்ராலிக் பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

மால்வா என்ற லூதியானா கம்பெனி Steam Calendering மெஷினைத் திருப்பூருக்கு அறிமுகப்படுத்தினார்கள். 1965-66 வாக்கில் 24gg பைன் என்று தற்போது அழைக்கப்படும் நைஸ் ரக பனியன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்றைய நாளில் லூதியானாவின் நிட்டிங் மெஷின்கள் – PMW, ராஜ், Sohalsons மெஷின்கள், எவரெஸ்ட் பழனிசாமியின் நிட்மேக், ஸ்டார் கந்தசாமியின் ஸ்டார் நிட் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பனியன் துணிகள் பின்னப்பட்டன. SWAMIJIS ஓப்பன் கேம்ப் மிஷின்கள் முதல் முதலில் திரு.ஐடியல் கோவிந்தசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இண்டர்லாக் என்றால், 24gg 60’s Interlock இண்டர்லாக் துணி பின்னாளில் அறிமுகப்படுத்தப்பட்டு மார்க்கெட் விரிவானது. இந்த ரகம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட ரகமாக 24gg பைன் & 26gg பைன், 14gg Rib, 16gg Rib என நிறைய மிஷின்கள் லூதியானவில் இருந்து தருவிக்கப்பட்டு நம் ஊர் மக்களால் உபயோகப்படுத்தப்பட்டது. RLM பழனிசாமி அவர்கள் நிட்டிங் & தையல் மெஷின்களை வடநாட்டிலிருந்து ஏராளமாகக் கொண்டு வந்து திருப்பூரின் அன்றைய தேவையை பூர்த்தி செய்தார் என்பதைப் பதிவு செய்கிறேன், வேலைவாய்ப்பு பெருகியது. இன்றைய நாளில் வெளிநாட்டு மெஷின்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும் கூட, 24gg & 26gg மெஷின்கள் K-Tech கிருஷ்ணன் அவர்களால் வெளிநாட்டு மெஷின்களுக்கு இணையாக தயாரிக்கப்படுகின்றன.

இதையொட்டி பிளீச்சிங் யூனிட்கள் (தொட்டி) பெருகின பின் ‘விஞ்ச்’ பிளீச்சிங் உருவானது. அதிகமான உற்பத்தி செய்யப்பட்டது. கேலண்டரிங் மெஷின் ஜெர்மனியில் இருந்தும், தையல் இயந்திரங்கள் ஜப்பான்,  தைவான், ஜெர்மனி போன்ற நாடுகளிடம் இருந்து பெறப்பட்டன. அன்று குமரன் ரோட்டில் மிகச்சிறிய அளவில் செயல்பட்ட SIHMA (வாடகைக்கட்டிடத்தில்), இன்று சொந்த கட்டிடத்தில் பெரிய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தத் தாய்ச்சங்கம் இன்று பரந்துவிரிந்து ஏராளமான துணைச் சங்கங்களைக் கொண்டு பழமை மாறாமல், இளமை குன்றாமல் நோக்கம் சிதறாமல், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என இணைந்து செயல்பட்டு வருகின்றது. அன்றைய ஸ்தாபகத் தலைவர் திரு.ஹாஜி ஜனாப் S.A.காதர் அவர்கள், பின்னாளில் அந்தத் தலைமையை திரு, மாமனிதர் மோகன்ஜி அவர்கள் தலைமை தாங்கி நடத்திவந்தார்கள். அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் இப்பதவியில் இருந்து அரும்பெரும் சாதனைகள் செய்தார். அவற்றில் முக்கியமானது, Harvey ரோட்டில் அமைந்துள்ள இந்த SIDCO தொழிற்பேட்டை ஆகும். இந்த SIDCO தொழிற்பேட்டையை அரசிடம் உரிய முறையில் அணுகி மன்றாடிப் பெற்றுத்தந்ததில் திரு.மோகன்ஜியின் முழு ஒத்துழைப்பும், GTI. திரு.கார்த்திகேயன் அவர்களின் ஆலோசனை/ஆதரவாலும்  கிடைத்தது.

அதை கிரி.திரு.ரங்கசாமி அவர்களின் வற்புறுத்தலாலும், அவருடன் சில்க்.வெள்ளியங்கிரி, டி.எஸ்.பி. சகோதரர்கள் ஒத்துழைப்புடனும், சொந்த இடம், கம்பெனி இல்லாதவர்களுக்கு தொழில் செய்ய தவணை முறையில் இடம், கட்டிடம், விரிவாக்கம் செய்ய காலி இடம் என வாங்கிக்கொடுத்ததால், 42 பேருக்கு இடம் கிடைத்தது.

பதவியிலிருக்கும் நாம் தொழிற்பேட்டையில் எந்த இடத்தையும் கேட்கக்கூடாது என்ற பெருமனதுடன் திரு.மோகன்ஜி, திரு.சேர்மன் கந்தசாமி மற்றும் GTI திரு. கார்த்திகேயன் போன்றவர்கள் இடம் கேட்டு விண்ணப்பிக்காமல், மற்றவர்களுக்கு வழிவிட்டு மகிழ்ந்தார்கள் என்பதைப் பதிவு செய்வதோடு, நமது சங்கம் வாடகைக் கட்டடத்தில் இருந்து இப்போதிருக்கும் சொத்த இடத்திற்கு மாற்றுவதற்கு, திரு, மோகன்ஜி அவர்களின் ஒத்துழைப்போடு, சேர்மன்.கந்தசாமி, கிரி. ரங்கசாமி, OK கந்தசாமி ஆகியோர் சங்க இடத்தை சிட்கோவிடமிருந்து பெற்றனர் என்பதையும் அறிந்தவரை பதிவு செய்கிறேன்.

முத்தாய்ப்பாக நமது சங்கம் திரு.மோகன்ஜியின் முயற்சியுடன் பனியனுக்கு என ISI முந்திரை பெற்றுக்கொடுத்தது. அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் திரு.GTI கார்த்திகேயன் அவர்கள். ISI மார்க் வாங்க மாபெரும் உதவியை செய்து அதற்குண்டான ‘standard’களை, உண்மைச் செய்திகளை இந்திய தர நிர்ணய சபைக்குக் கொடுத்தார். மேலும் அவர் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்களும் மந்திய அரசின் NSIC மூலம் “NIC” என்ற பிராண்டை இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தரமான பனியன்கள் மற்றும் ஜட்டிகள்  தயார் செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வந்தன. நமது சங்கம் “நிட்மேக்” திரு.வி.கே.வி.சேகர் முதல்வராக செயல்பட்டு SIHMA INSTITUTE என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பனியன் தொழிற்கல்வி கற்றுத்தந்து அரும்பணியாற்றி சிறப்பு சேர்த்தது.

அன்று லூதியானா இயந்திரங்கள், பனியன் துணி அரைக்கவும், பனியன் தைக்கவும், திருப்பூருக்கு வந்தன. அது மாறி, 1980க்குப்பின் ஏற்றுமதி வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியபின் 18, 19, 20, 22, 24, 26 28, 30, 32, 34 என பெரிய டயா மீட்டர் இந்திய மெஷின்கள் வாங்கப்பட்டு, அதில் 4 track அமைக்கப்பட்டு, திக்பிக், ஸ்டிரைப்டு, பைன், டோரியா போன்ற பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.பின்பு ‘டையிங் யூனிட்கள்’ பெருக ஆரம்பித்தன. ‘பாய்லர்கள் தருவிக்கப்பட்டு, அதன்மூலம் நீராவியை உற்பத்தி செய்து ‘Hot Process’ என்று சொல்லப்படும், சாயம் ஏற்றப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த தரத்துடன் கலர் துணிகள் ஏற்றுமதி நிறுவனத்திற்கு அவர்கள்  தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டது. பின் 1988 வருட வாக்கில் ஏராளமான தையல் இயந்திரங்கள், Special தையல் இயந்திரங்கள், நிட்டிங் இயந்திரங்கள், Auto stripe, ஜாக்கார்டு போன்ற இயந்திரங்களின் மூலம் நவீன மோஸ்தார்களில் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. செய்யப்பட்டு வருகின்றன.

Solo Jayabal (Crystal) அவர்கள், தொழில்நுட்ப மேம்பாட்டுடன் Single Rib-பனியனை வெள்ளை மற்றும் பல வண்ண நிறங்களில் தயாரித்து அற்புதமான பெட்டியில் பேக் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தி, குறிப்பாக வட மாநில மார்க்கெட்டில் “பிரிமியத்திற்கு” விற்றது, நமது ஊரின் தொழிற்திறமையை பறைசாற்றியது என்பதை பெருமையுடனும், அதேபோல் டேப்ஸ் என்று அழைக்கப்படுகின்ற Inner/Outer/Name எலாஸ்டிக் ரகங்களை நவீன இயந்திரங்கள் மூலம் திருப்பூரிலேயே தயாரித்து, உள்ளாடைகள்  மார்க்கெட்டில் அதிக விற்பனை செய்வதற்கு, சகோதரர்கள் M.P. Tapes திரு.முத்துசாமி அவர்கள் & J.V. Tapes திரு. பழனிசாமி அவர்கள் மற்றும் VIJAY Tapes-திரு.பெஸ்ட்.ராமசாமி அவர்களும் எலாஸ்டிக் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்கள் என்பதைத் தெரிந்தவரை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்று மிக மிக மெல்லிய நூல் இழைகள் மில்களால் தயாரிக்கப்பட்டு 32gg, 34gg வரையிலான நிட்டிங் இயந்திரங்களில் துணியாக உருவாக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனையாகிக் கொண்டுள்ளன. இன்று பனியன் துணிகளில் பல விதவிதமான உள்ளாடைகள் , வெளி ஆடைகள், விளையாட்டுக்கென பிரத்யேக ஆடைகள், ஜாக்கிங் சூட், ஸ்விம் வியர், பேபி வியர், கேசுவல் வியர், just born என பல்கிப் பெருகி வளர்ந்து விட்டன. அதற்கான தேவைகள் உள்நாடு  மற்றும் வெளிநாடுகளில் ஏராளம்.

பனியன் தொழில் வளர்ச்சியினூடாக, தன்னிகரற்ற தரத்தினை நோக்கில் கொண்டு, அனுதினமும் மேம்படுத்தப்படும் துறைகளான Knitting, Bleaching, Dyeing, Compacting, Embroidery, Printing, Chest Printing, Sublimation Printing, Reactive Printing, Discharge Printing, Packing Materials என என்னவெல்லாம் உள்ளனவோ அவ்வளவும் ஒவ்வொரு தினமும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. லைக்ரா யார்ன் உள்ளே வந்தது. யார்ன் -ல் எவ்வளவோ வகைகள் பாலிஸ்டர், பாலிமர், பிளண்ட் , விஸ்கோஸ் +cotton, மொடால், பேம்பு, என இவ்வளவு தான் என்று இல்லை.

Cad cam கட்டிங் இயந்திரங்கள் Collar machineகள் Elastic தயாரிக்க என இயந்திரங்கள், லேபில் தயாரிக்க இயந்திரங்கள், அட்டைப் பெட்டி, காருகேட்டட் Box செய்ய இயந்திரங்கள் என திருப்பூரில் குவிந்து விட்டன. தொழில் பெருக்கம் மாசை உண்டாக்கும். குறிப்பாக சாயத்தண்ணீரில் இருக்கும் மாசுக்களை DAT Associationனின் தலைமைப் பொறுப்பிலிருந்து சேர்மன்.கந்தசாமி, எஸ்.எஸ்.சாமியப்பன் அவர்களின் அயராத முயற்சியாலும் தனியாகச் சுத்திகரிப்பு நிலையங்கள் CETP, ETP என பல நிலையங்கள் நன்கு இயங்கி வருகின்றன. DIVIYAR (SPY) நாகராஜ் அவர்கள் முழுமுயற்சியெடுத்து தொழில்நுட்ப ரீதியாக மாசுவை நீக்குவதற்கு RO system மூலம் உலகிலேயே ZERO Discharge முறையில், மாசுநீக்கிய தண்ணீரை  மீண்டும் உபயோகப்படுத்தி வெற்றிகண்டதில், தொழில் சிறந்து நடந்துகொண்டுள்ளது என்பதைப் பதிவு செய்கிறேன். ஏற்றுமதி வர்த்தகம் 20 ஆயிரம் கோடி என்றால் உள்நாட்டு வர்த்தகம் 10 ஆயிரம் கோடி என வளர்ந்துவிட்டது. இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்துள்ள ஊரில் தொழில் தகராறுகள் ஆர்பிட்ரேசன் கவுச்சில் மூலமாகவும், தொழிலாளர் பிரச்சினைகள் நமது சங்கமும்-தொழிற்சங்கங்களும் இணைந்து பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் பேசித் தீர்க்கப்படுகின்றன. நமது சங்கக் கட்டிடத்தில் ஆர்பிட்ரேசன் கவுனிசில் ஜெய்ஹிந்த் திரு மந்தராசலம் அவர்களின் தலைமையில், நமது செயற்குழு உறுப்பினர்களான டெக்ஸ் டாம் நாச்சிமுத்து, லிட்டில் ராமசாமி அவர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் தொழில்முனைவோர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பணம் சார்ந்ததாக இருந்தாலும், மனம் சார்ந்ததாக இருந்தாலும், உடல் சார்ந்ததாக இருந்தாலும், ஆன்ம பலம் கொண்டு கால ஓட்டத்தில் அவைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, மிகத்துன்பமான காலத்தில் கூட, முகமலர்ச்சியோடு குடும்ப உறவு. சமூக உறவு, தொழில் உறவு பேணி வருங்கால சந்ததிக்கு வழிகாட்டிய மாமனிதர்களைப் பெற்றதுதான் நமது திருப்பூர் பனியன் நகரம் என்பதை நெஞ்சார்ந்த நன்றியோடு இங்கே பதிவு செய்கிறேன்.

இந்தத் தொழில் வளர்ச்சிக்குப் பங்காற்றிய பெருந்தகையாளர்களை இந்நேரத்தில் நாம் நினைவில் கொள்வது அவசியம், அவர்களில் ஹாஜி ஜனாப் SA காதர் அவர்கள், பீஸ்மர் பிதாமகன் மோஹன்ஜி Ex. MLA., அவர்கள், GTI கார்த்திகேயன் அவர்கள், சேர்மன் N.கந்தசாமி அவர்கள் மெட்ராஸ் நிட்டிங் பழனிசாமி அவர்கள், ஜிம்மி துரைசாமி அவர்கள் (முன்னாள் தலைவர் ஆர்பிட்ரேசன் & சைமா எக்ஸ்போர்ட் விங்), கரோனா சுவாமிநாதன் அவர்கள் (முன்னாள் தலைவர்), சில்பி நாராயணசாமி அவர்கள், ஹிமாலயா முத்துசாமி அவர்கள், சைனிக் சுப்பிரமணியம் அவர்கள், சபாபதி நிட்டிங் சபாபதி அவர்கள், ஜெமினி வெள்ளியங்கிரி அவர்கள், மில்லர் ராமசாமி அவர்கள் ஸ்பேரோ வேலுசாமி அவர்கள்,

பேன்சி நாச்சிமுத்து அவர்கள், கருணா குமாரசாமி அவர்கள், TMK நாச்சிமுத்து அவர்கள், ரேங்க் நடராஜ் அவர்கள், ஜீப்ரா பழனிசாமி அவர்கள் பெஸ்ட் ராமசாமி அவர்கள், ஜூபிடர் சுப்ரமணியம் அவர்கள், AK வடிவேலு அவர்கள், லீலா கங்காதரன் அவர்கள், OK கந்தசாமி அவர்கள், வீனஸ் குமாரசாமி அவர்கள், PVS சுப்ரமணியம் அவர்கள், சன். கோவிந்தசாமி அவர்கள், சித்ரா கோவிந்தசாமி அவர்கள், கிரௌன் கிருஷ்ணசாமி அவர்கள், டிட்டி சுப்ரமணியம் அவர்கள், ரத்னா நிட்டிங் உரிமையாளர் அவர்கள், கணக்காளர் R.வெள்ளியங்கிரி அவர்கள், தலைமைப்பதவி வகித்து வரும் வைக்கிங் A.C. ஈஸ்வரன் அவர்கள், செயலாளர் பொன்னுசாமி எம்பரர் அவர்கள், பொருளாளார் சித்ரா. ராமசாமி அவர்கள், இணைச்செயலாளர்கள் விஸ்வாஸ் இராமசாமி அவர்கள், சீசன் தாமோதரன் அவர்கள், அவர்களோடு இணைந்து செயலாற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் FKC அருணாசலம் அவர்கள், PVS முருகசாமி அவர்கள், பூமர் பழனிசாமி அவர்கள், ராமு முருகேசன் அவர்கள், மேகாலயா கந்தசாமி அவர்கள், லிட்டில் ராமசாமி அவர்கள், டெக்ஸ் டாம் நாச்சிமுத்து அவர்கள், சாந்தி சாமிநாதன் அவர்கள், திருப்பூர் பண்டிட் சுப்ரமணியம் அவர்கள், டெக்ஸ்வெல் சுந்தரம் அவர்கள், ரூபா ஆனந்த் அவர்கள், டாலர் பினய்குப்தா அவர்கள், டிக்ஸி பிரேம் அவர்கள், CBC ரங்கசாமி அவர்கள், அம்பர் ஹம்சாபாய் அவர்கள், RD Knitwear சசி.P, அகர்வாலா  அவர்கள், ASP.ஆறுமுகம் அவர்கள்,

Jayavel சுந்தரம், NRG. நடராஜ் அவர்கள், RSP சம்பத் அவர்கள், சுகன் சண்முகம் அவர்கள், GMR. கோவிந்தசாமி அவர்கள், BlueBull சுப்ரமணியம் அவர்கள், ஆலோசனைக்குழுவிலிருக்கும் சீமன்ஸ் ராஜாமணி அவர்கள், CTEX கோவிந்தசாமி அவர்கள், DMR தெய்வசிகாமணி அவர்கள், ரேடியம் ரங்கசாமி அவர்கள், R&R (ராம்ராஜ்) செல்வகுமார் அவர்கள், பகவந்த் சுந்தர்ராஜ் அவர்கள், பிரீமேன் ஆனந்த் அவர்கள், எக்ஸ்லான் ராமசாமி அவர்கள், நியுடெல்லி-விஸ்வநாதன் அவர்கள், BKC.A.ராஜாமாணிக்கம் அவர்கள், ஆஸ்கர் ராமசாமி அவர்கள், மர்ஜான் சிராஜுதீன் அவர்கள், என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களனைவரையும் பாராட்டுவதில் மனமகிழ்வடைகிறேன். அதேபோல் தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி பாடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பெரியவர் தோழர் A.கணபதி அவர்கள், பெரியவர். தோழர் KS.கருப்புசாமி அவர்கள் போன்றவர்களையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து நன்றி கூறுகிறோம்.

தொழிற்சங்கம் என எடுத்துக்கொண்டால் AITUC, CITU, INTUC, LPF, MLF, ATP, என அனைத்து சங்கங்களும் அவர்களின் சேவையை நினைவு கூற வேண்டியுள்ளது. அதில் சிறப்பாக தோழர் சுப்பராயன்  Ex. MP., அவர்கள் M.LA.வாக இருந்தபோது, பனியனுக்கு உண்டான விற்பனை வரி விலக்கு வாங்கிக்கொடுத்தார். தோழர் தங்கவேல் MLA அவர்கள், V.பழனிசாமி Ex. MLA., AIADMK அவர்கள், தோழர் காமராஜ் CPM அவர்கள், முன்னாள் மேயர் செல்வராஜ் DMK அவர்கள், INTUC தண்டபாணி அவர்கள், முத்துக்குமாரசாமி MLF அவர்கள், மற்றும் ராமகிருஷ்ணன் LPF அவர்கள், போன்றவர்கள் தொழிற்சங்கத் தலைவராக இருந்து பனியன் தொழில் மற்றும் நகர வளர்ச்சியில் நன்கு செயலாற்றிக்கொண்டுள்ள இவர்களுக்கு இந்நேரத்தில் எங்களின் நன்றியை உரித்தாக்குகிறோம். தொழில் முனைவோரும், தொழிற்சங்கங்களும் இணைந்து நமது தொழிலைக் காப்பாற்றி வருவதில் நம் மாநகர்தான் முன்னோடி என்பதையும் பெருமிதத்தோடு பதிவு செய்கிறேன்.

கல்கத்தாவை தலைமயகமாகக் கொண்டு இயங்கிவரும் FOHMA-வின் தென் மண்டல உதவித்தலைவராக இருந்து நமது மோகன்ஜி அவர்கள், தலைவர் T.T.Sri. R.C.JAIN, உடன் இணைந்து மத்திய அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பனியன் தொழிலின் வளர்ச்சியின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்சமயம் நமது தலைவர் வைக்கிங் AC. ஈஸ்வரன் அவர்கள் உதவித்தலைவராகவும், R.D. Knitwear P. சசி அகர்வாலா இணைச்செயலாளராகவும் இருந்து சிறப்பு சேர்த்துவருகிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் பெருமகிழ்வுடன் பதிவுசெய்யிறேன்.

திருப்பூர் நகரில் முதன் முதலில் ஏற்றுமதி வர்த்தகத்தை ஆரம்பித்து USAவிற்கு பனியன் ஏற்றுமதி செய்த பெருமை நமது மோகன்ஜி அவர்களையே சாரும். சிட்டி நிட்டிங் பழனிசாமி மற்றும் அவரது மகன் பாலசுப்ரமணியம் மிகப்பிரம்மாண்ட அளவில் ஏற்றுமதி வியாபாரத்தை ஒரு குடையின் கீழ் (டையிங், பிரிண்டிங் & உற்பத்தித் திறன்) நிர்வகித்து ஏராளமான T.Shirt இத்யாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, மத்திய அரசின் பல பரிசுகளைப் பெற்று திருப்பூருக்குப் பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவராவர், பின்னாளில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆசிய நாடுகளே வியக்கும் வண்ணம் M/s., சென்ட்வின் நிறுவனத்தார் முத்திரை பதித்தவர்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

நமது சங்கத்தைப் போல் திருப்பூர் மாநகரின் அபாரமான வளர்ச்சியில் பத்மஸ்ரீ டாக்டர். திரு.சக்திவேல் அவர்கள் தலைமையில் இயங்கி வருகின்ற நமது வாரிசு சங்கமான TEA சங்கம் பனியன் ஏற்றுமதி சிறந்து வளர பாடுபட்ட சங்கம் என்பது நிதர்சனம். முதலிபாளையம் சிட்கோ, நேதாஜி அப்பேரல் பார்க், IKF பனியன் கண்காட்சி வளாகம், TEA பப்ளிக் ஸ்கூல் மற்றும் நிஃப்ட் காலேஜ், NTDCL மூலம் 3வது குடிநீர்த்திட்டம் கொண்டுவந்தது போன்ற பணிகள் செய்து சிறப்பித்ததை மறக்கமுடியாது. அதோடு திரு.சக்திவேல் அவர்கள் TEA சங்கம் சார்பில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு.ரங்கராஜன் அவர்களை, திருப்பூர் அழைத்துவந்து பெருமை சேர்த்தார் என்பதையும் பதிவுசெய்கிறேன்

திருப்பூர் சமூக நலனில் பெரும் அக்கறையோடு நமது வாரிசு பின்னலாடை சங்கமான BCMA-KNITcMA, அகில்.திரு.ரத்னசாமி அவர்களின் தலைமையில் நொய்யல் நதியை சீரமைப்பு செய்து வருவதோடு, நமது சங்கத்திற்கு ஃபேப்ரிகேஷன் சாலை அமைத்து பெருமை சேர்த்தது. அதோடு KNITcMA வின் 25வது வெள்ளிவிழா ஆண்டில் மறைந்த மாமனிதர் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களை நமது திருப்பூர் நகருக்கு அழைத்துவந்து விழாவைச் சிறப்பித்தோடு,  திருப்பூருக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்தார் என்பதையும் பெருமிதத்துடன் பதிவு செய்கிறேன்.

திருப்பூர் மாநகர் மேலும் வளர்ச்சியில் அக்கறை கொண்டு திரு. வார்ஷா ராஜா M.சண்முகம் தலைமையில் ஸ்ரீபுரம் டிரஸ்ட் அமைப்பினர் தொழில் பாதுகாப்புக்கு மாற்றம் கொண்டுவர சிறப்பாக பாடுபடுவதோடு, திருப்பூர் மாநகருக்கு CII அமைப்பைக் கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளார் என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன்.

பனியன் தொழிலில் வளர்ச்சியடைய, அது சந்தித்த இடற்பாடுகளைப் பற்றி குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு, நூல் விலை ஏற்றம், ஊசித்தட்டுப்பாடு, எடையளவு சட்ட முரண்பாடு, தொழிலாளர் பிரச்சினை இத்யாதி இத்யாதிகள் பற்றி இரண்டு பக்கங்களில் விவரித்து விடமுடியாது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், விரைவில் இதk சரித்திரத்தைப் புத்தகமாகவும் வெளியிடும்.

இன்று இந்தத் துறைக்கென பல அரசு அமைப்புகள் Textile committee, AEPC, NIFT, TEA பள்ளி Training Programகள்  எல்லாம் நடத்தப்படுகின்றன. இந்த Diamond jubilee விழாவில் இந்தத் தொழிலின் வளர்ச்சியில் ஆதரவு தந்த மத்திய மாநில அரசுகள், வங்கிகள் குறிப்பாக SBI, CANARA, IOB மற்றும் பல்வேறு அமைப்புகள் குறிப்பாக NSIC, SIDCO, TIIC போன்ற அமைப்புகள் SIDBI போன்றவைகள் எல்லாம் நன்கு தன் ஆதரவுக் கரங்களை நீட்டிவருகின்றன. மாவட்டத் தொழில் மையம், ESI, PF அதிகாரிகள், Labour Officer, Sales Tax & IT Officers என அனைவரும் நன்கு ஒத்துழைப்புத் தந்து தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள், இருந்தும் வருகிறார்கள். இவர்களை எல்லாம் இந்த சங்கம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. எங்களுடன் இணைத்து பணியாற்றும் தொழிலாளத் தோழர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள் எல்லாம் எங்கள் நன்றிக்கு உரித்தானவர்கள்.

எங்களோடு ஒத்துழைத்து சங்கத்தின் செயல்களை சிறப்புடன் செய்துவரும் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன், திரு. நிஜாமுதீன் பாய், திருமதி சிவகாமி, திரு.நாராயணன், திரு,பாலன், திரு.கோவிந்தசாமி, திருமதி. மணியம்மாள், திருமதி, விஜயலட்சுமி, திருமதி, அஞ்சலி மற்றும் நமது சங்கத்திற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், ஒத்துழைப்பும் அளித்து வரும் ஆடிட்டர், திருA.லோகநாதன், ஆடிட்டர். திரு.T.R. ராமநாதன், அட்வகேட். திரு.S.ராமமூர்த்தி, அட்வகேட், திரு.R.கிருஷ்ணமூர்த்தி உட்பட நமது சங்கத்திற்கு நல்  ஒத்துழைப்பு தந்துவரும் பத்திரிகை நண்பர்கள், ஊடகவியலாளர்களுக்கும் வைரவிழா காணும் இந்நேரத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்; எதிர்வரும் காலங்களில் இந்தொழில் இன்னும் பல சிறப்புக்களைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமது அரசுகளுக்குக் குறிப்பாக விற்பனை வரி, முத்திரைத்தாள் விற்பனை (மாநில அரசு), வருமான வரி (மத்திய அரசு), ஈட்டித்தரும் பெரு நகரங்களில் முக்கிய நகரமாக நமது திருப்பூர் மாநகரம் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவிப்பதோடு, அரசுகளுக்கு வேண்டுகோளாக, பல மாவட்ட, மாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தந்துகொண்டிருக்கும் மாநகரமாகவும் பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் மாநகரமாகவும் உள்ளதால், அரசு பெருமுனைப்புடன் தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள், தொழில் மேலும் மேன்மை வளர்ச்சிக்கு (SITRA – கோவை போல்) ஆராய்ச்சிக்கூடம், நகர உட்கட்டமைப்பு வசதிகளில் மேம்பாடு செய்துதர கோரிக்கையாக வைக்கிறோம்.

தாய்ச்சங்கம் சைமாவும், வாரிசு சங்கப்களான TEA, KNIcTMA, BLEACHING ASSN., TEKMA, DAT, SIIMKA, TEKPA, TRSPA, PRINTING, TEAMA, TIF, PTOA மற்றும் காம்பேக்டிங், எம்ப்ராய்டரி, கார்ட்டூன் பாக்ஸ் தயாரிப்பு, லேபிள் தயாரிப்பாளர் சங்கங்கள் உட்பட எல்லோரும் இணைந்து,

வான்பறக்கும் பறவைக்கில்லை கட்டுப்பாடு,

அவ்வானமே நம் எல்லை என்றே பாடு,

வறுமைக்கு வைப்போம் ஒரு நல் சூடு,

 வளம் கூட்டிச் செய்வோம் ஒரு பொன் நாடு.

[மேதகு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவான இந்திய வல்லரசு]

என்று பாடி திசைகளனைத்தும் சிறகடித்துப் பறந்து, நம் திறம் கொண்டு வளமனைத்தும் இங்கு கொணர்ந்து, எல்லோரும் நலம் வாழ, மேலும் வழிவகுத்திடுவோமாக.

இவண்,

கீதாஞ்சலி S. கோவிந்தப்பன்,

துணைத்தலைவர், சைமா, திருப்பூர்,

WhatsApp Now
1
Scan the code
Hello 👋
Can we help you?