திருப்பூரின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லியில் முக்கிய சந்திப்பு
திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையில் நிலவி வரும் நூல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) தலைவர் திரு. A.சக்திவேல் அவர்களின் தலைமையில் திருப்பூரின் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லிக்குச் சென்றனர்.
அங்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பியூஷ் கோயல், வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவராஜ் சிங் சவுகான், ஜவுளித்துறை அமைச்சர் மாண்புமிகு கிரி ராஜ் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு எல்.முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இச்சந்திப்பின் போது, சைமா (SIHMA) தலைவர் திரு. ESSDEE P.சண்முகசுந்தரம் மற்றும் பொதுச்செயலாளர் திரு. R.தாமோதரன் ஆகியோர் அமைச்சர்களிடம் பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை (Import Duty) ரத்து செய்வதே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக அமையும் என்று வலியுறுத்தினர்.
மேலும், நடப்பு ஆண்டுக்குத் தேவையான 337 லட்சம் பேல்களில் 45 லட்சம் பேல்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நூல் விலை உயர்ந்து வருவதையும், இதனால் சர்வதேச சந்தையில் அண்டை நாடுகளுடன் போட்டியிட முடியாமல் இந்திய உற்பத்தியாளர்கள் சந்திக்கும் சிரமங்களையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த முக்கிய சந்திப்புகளின் போது திருப்பூர் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி TEA தலைவர் திரு. K.M. சுப்பிரமணியன், சாய ஆலை சங்க இணைச் செயலாளர் திரு. K. சுதாகர், TEKPA தலைவர் திரு. T.R. ஸ்ரீகாந்த் மற்றும் TEKMA, TIDGMA, SIIMKA ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். உற்பத்தி செலவு மற்றும் இறக்குமதி சவால்களை எதிர்கொண்டு திருப்பூரின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
